ஒபாமா, பில்கேட்ஸ் ட்விட்டர்களில் ஊடுருவல்.. சிஇஓ ஜாக்டோர்சே விளக்கம்..
ஒபாமா, பில்கேட்ஸ், ஜோபிடன் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் ஊடுருவல் நடந்துள்ளது. பிட்காயின் அனுப்பினால், இரட்டிப்பாகத் தருவதாக அதில் கூறப்பட்டது. இந்த ஹேக்கிங் குறித்து டிவிட்டர் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மைக்ரோ சாப்ட் தொழிலதிபர் பில்கேட்ஸ், அமேசான் சிஇஓ ஜெப்பெசோஸ், நியூயார்க் முன்னாள் மேயர் மைக் ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் நேற்று மர்ம நபர்கள் ஊடுருவல்(ஹேக்கிங்) செய்தனர். அந்த ட்விட்டர் பக்கங்களில் பிட்காயின்களுக்கு இரட்டிப்பு பணம் தரும் என்ற வகையில் ட்விட் செய்யப்பட்டிருந்தது.
ஒபாமா ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நான் எனது சமூகத்துக்கு எல்லாவற்றையும் திருப்பி கொடுக்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும், நான் இரட்டிப்பாகத் திரும்ப அனுப்பப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தது.இந்த ஹேக்கிங் குறித்து ட்விட்டர் சிஇஓ ஜாக்டோர்சே ஒரு ட்விட் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், இன்று ட்விட்டரில் எங்களுக்கான மோசமான தருணம். ஹேக்கிங் குறித்து என்ன நடந்தது என்று ஆராய்ந்து வருகிறோம். விசாரணைக்குப் பின்பு முடிந்த வரை தகவல்களைப் பரிமாறுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.