இளையராஜா அண்ணன் மகன் காலமானார்.. படம் இயக்கி வந்த பாவலர் மைந்தன்..
இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். இவரைத் தனது வழிகாட்டி என்றே இளையராஜா அழைப்பார். பாவலர் வரதராஜன் மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன். கடந்த சில நாட்களாகப் பாவலர் மைந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாவலர் மைந்தனுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை இதனால் அவர் கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர் போன்ற பல படங்களில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றினார். பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின், திருப்பதி போன்றவர்கள் நடித்து வந்த நாலுபேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார் பாவலர் மைந்தன் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வந்தார். முன்னதாக கற்க கசடற என்ற படத்துக்கும் வசனம் எழுதி உள்ளார். பாவலர் மைந்தன் இறுதி சடங்கு இன்று நடக்கிறது.