உச்ச நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்திய மாநில அரசுகள்.. மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை..

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை..நேற்று சென்னையில் பாதாளச் சாக்கடைக் குழிக்குள், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் மீண்டும் மனித உயிர்கள் அலட்சியப்படுத்தப்படுவதை அழுத்தம் திருத்தமாகக் காண்பிக்கிறது. கடந்த ஜூலை 2ம் தேதி தூத்துக்குடியில் நான்கு தொழிலாளர்கள், நேற்று சென்னையில் இருவர் எனத் துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை 1993ம் ஆண்டு தடை செய்யப்பட்டதுடன், 2013ல் இத்தடை, சட்டமாக இயற்றப்பட்டுப் பல திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

2014ல் உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளும் இச்சட்டத்தைப் பின்பற்றி சாக்கடை அள்ளும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்வதுடன், அப்பணியில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் 1993ல் இருந்து 2019 வரை 206 தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடை அள்ளும் பணியில் உயிரிழந்துள்ளனர். நம் மாநில அரசுகள் அத்தொழிலாளர்களின் உயிரையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எத்தனை அலட்சியப்படுத்தியுள்ளது என்பது புலப்படும் உண்மை.

சட்டத்தால் தடை செய்யப்பட்ட செயல், நம் மாநிலத்தில் மீண்டும் மீண்டும் நடக்கிறதென்றால் நம் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன என்கின்ற கேள்வி எழாமல் இல்லை. மனித உயிர்களுக்கு எதிரான அனைத்து அநீதிகளையும் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது போல, அரசு இதையும் வேடிக்கை பார்த்து அமைதி காப்பது குற்றமாகும்.அறிவியல் சாதனைகளில் உச்சம் தொட்டாலும் அன்பின் இயல் வளரா சமூகமாக நாம் தேங்கி விடக்கூடாது. மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றுவது தடை செய்யப்பட்ட குற்றம். சக மனிதனை அக்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றத்தைப் பிறரைச் செய்ய விடாமல் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இவ்வாறு மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.

More News >>