தமிழகத்தில் ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு பலி..
தமிழகத்தில் நேற்று(ஜூலை17) ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது வரை பலியானவர்கள் எண்ணிக்கை 2315 ஆக அதிகரித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. இந்தியாவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை17) 4538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 65 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 60,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3391 பேரையும் சேர்த்தால், மொத்தம் ஒரு லட்சத்து 19,807 பேர் குணம் அடைந்துள்ளனர். இது வரை இல்லாத வகையில் நேற்று 79 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இவர்களையும் சேர்த்தால் 2315 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. நேற்று 1243 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 83,377 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 124 பேருக்கும், காஞ்சிபுரம் 110, மதுரை 262, திருவள்ளூர் 220 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 7858 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரிலும் பாதிப்பு எண்ணிக்கை 8107 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில்தான் ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.