நடிகர் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் பட அதிபரிடம் விசாரணை.. ரகசியம் அம்பலத்துக்கு வருமா?
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை பாந்த்ரா நகர் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கை வாரிசு நடிகர் அவமானப்படுத்தியது அவரது மன அழுத்தத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) நிறுவனம் சுஷாந்திடம் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு அந்த படங்களை எடுக்காமல் காலம் தாழ்த்தியும் மற்ற படங்களில் சுஷாந்துக்கு நடிக்க வாய்ப்பு வரும்போது அவரிடம் ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி அந்த படங்களில் நடிக்கவிடாமல் செய்ததும் அவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இது பற்றி யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவன அதிபர் ஆதித்ய சோப்ராவிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது, அவரை நேற்று போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சுஷாந்திடம் போடப்பட்ட ஒப்பந்தம் பற்றியும். அவரை பிற படங்களில் நடிக்க விடாமல் தடுத்தது ஏன்? ஒப்பந்தப்படி படம் தயாரிக்காதது ஏன்? எனச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டு பதில் பெற்று அதை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர். இதையடுத்து சுஷாந்த்தின் தற்கொலைக்கான ரகசியம் அம்பலத்துக்கு வருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் யஷ் ராஜ் பிலிம்ஸ் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. சுதேசி ரொமான்ஸ். துப்பறியும் பியோம்கேஷ் பக்ஷி. பானி. ஆகிய 3 படங்களுக்கு ஒப்பந்தம் இருந்தது.
இதற்கிடையில் சஞ்சய் லீலா பன்சாலியின் 3 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்க முடியாமல் சுஷாந்த் கைகள் கட்டப்பட்டிருந்தது. படங்களை எப்போது தயாரிக்கப் போகிறீர்கள் என்று யஷ் ராஜ் பிலிம்ஸாரிடம் சுஷாந்த் கேட்டு வந்தார். இதையடுத்து பானி படத்தை சேகர் கபூர் இயக்கத்தில் தயாரிப்பதாகக் கூறினர். ஆனால் அந்த படம் திடீரென கைவிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, சஞ்சய் லீலா பன்சாலி தனது தயாரிப்பில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் ஆகிய படங்களில் சுஷாந்திற்கு வாய்ப்பு வழங்க முன்வந்தார். அந்த வாய்ப்புகள் தான் அவரிடமிருந்து நழுவி வேறு நடிகர்களுக்கு சென்றது அந்த 3 படங்களும் வசூலில் பெரிய சாதனை படைத்தது. இது தொடர்பாக போலீசாரிடம் சஞ்சய் லீலா பன்சாலி ஏற்கனவே வாக்கு மூலம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.