பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் விருது வழங்க வேண்டும்.. கமல், மணிரத்னம் மற்றும் 33 பிரபலங்கள் மத்திய அரசுக்கு கடிதம்..
இயக்குனர் இமயம் என பட்டப்பெயருடன் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. சினிமா ஸ்டுடியோவுக்குள் முடங்கி இருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர். புரட்சிகரமான கருத்துக்களுடன் கூடிய படங்களை அளித்திருக்கும் அவருக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவரவிக்க வேண்டும் என்று கோரி கமல்ஹாசன்,மணிரத்னம் மற்றும் 33 பிரபலங்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:இயக்குனர் பாரதிராஜா தனது வாழ்க்கையில் 43 ஆண்டுகள் சினிமாவில் மிகப் பெரிய சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறார். வேலையில்ல திண்டாட்டம், சாதிமோதல், தீண்டாமை, பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு அதிகாரம், மனித உறவு போன்ற பல சமூகப் பிரச்சனைகளை தனது படங்களில் பேசி சமுதாயா விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். சிவாஜி கணேசன், ராஜேஷ் கண்ணா, கமல்ஹாசன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், நானா படேகர், சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், விஜய சாந்தி போன்றவர்களைத் தனது படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பாரதி ராஜா படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தும் வருகிறார்.
பாரதிராஜா 43 ஆண்டு சேவை இன்னமும் தொடர்கிறது. அவரது சேவைக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவது இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புக்குப் பொருத்தமான அங்கீகாரமாக இருக்கும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு, நடிகர்கள் ஆர் பார்த்திபன், தனுஷ், இயக்குனர்கள் பாலா, வெற்றி மாறன், தனுஷ் பிரியதர்ஷன், ஸ்ரீகர் பிரசாத், பி லெனின் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய விருது வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.