நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சமூக இடைவெளி..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைத் தொடங்குவது குறித்தும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளி பின்பற்றி இருக்கைகள் அமைப்பது குறித்தும் சபாநாயகர் ஓம் பிர்லாவுடன், ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு ஆலோசனை நடத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2வது முறையாகப் பதவியேற்றதும் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் 35 சட்ட மசோதாக்களும், மாநிலங்களவையில் 32 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதன்பின், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு புதிய சட்டங்கள் மீதும் நீண்ட விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பரவத் தொடங்கியதால், பட்ஜெட் கூட்டத் தொடர் அவசரமாக முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களும் நடைபெறவில்லை. இந்த கூட்டங்களைக் காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைத் தொடங்குவது குறித்து குடியரசு துணைத் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான வெங்கய்யா நாயுடுவும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் நேற்று(ஜூலை20) 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே சமூக இடைவெளி பின்பற்றி இருக்கைகளை மாற்றியமைப்பது குறித்து விவாதித்தனர். மேலும், லோக்சபா கூடும் போது அதன் உறுப்பினர்களுக்கு ராஜ்யசபா இருக்கைகளையும் பயன்படுத்திக் கொள்வது என்றும் ராஜ்யசபா கூடும் போது அதன் உறுப்பினர்களுக்கு லோக்சபா இருக்கைகளையும் பயன்படுத்திக் கொள்வது என்று யோசிக்கப்பட்டது.இந்நிலையில், ராஜ்யசபாவுக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளை(ஜூலை21) பதவியேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய உறுப்பினர்கள் 61 பேரில் 42 பேர் நாளை பொறுப்பேற்றுக் கொள்ள வருவதாகக் கூறியிருக்கின்றனர். கொரோனா காரணமாக வர முடியாத மற்றவர்கள், பின்னர் பதவியேற்பார்கள்.

More News >>