சென்னையில் கொரோனா பாதிப்பு 91 ஆயிரமானது.. மாவட்டங்களிலும் அதிகரிப்பு..

சென்னையில் இது வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று(ஜூலை23) ஒரே நாளில் 6472 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 49 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 92,964 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5210 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 36,793 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று மட்டுமே 88 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 3232 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினமும் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1336 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 90,900 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டில் நேற்று 375 பேருக்கும், காஞ்சிபுரம் 330, மதுரை 274, திருவள்ளூர் 416 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 10,888 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 8984 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 10,629 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நேற்று மட்டும் கோவையில் 238 பேர், திண்டுக்கல் 107, கள்ளக்குறிச்சி 132, கன்னியாகுமரி137, புதுக்கோட்டை 109, ராமநாதபுரம் 100, ராணிப்பேட்டை 214, தேனி 188, தூத்துக்குடி 415, விருதுநகர் 480, நெல்லை 216, திருச்சி 190 பேர் பல மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வருவது தொடர்கிறது. அதே போல், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனினும், கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், 4 மாதங்களாக ஊரடங்கால் கடும் அவதிப்பட்டதாலும் மக்கள் தற்போது சகஜ வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பைக் கண்டு பயப்படாமல் முக்கிய இடங்களில் கூட்டமாகக் கூடுவதையும் பார்க்க முடிகிறது.

More News >>