கொரோனா பரவலில் இந்தியா 2வது இடம்.. ஒரே நாளில் 50,000 பேருக்கு பாதிப்பு..

உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் 40 லட்சத்து 34,378 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 44,242 பேர் பலியாகியுள்ளனர்.நோய்ப் பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் 22 லட்சத்து 87,475 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 84082 பேர் பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து, 3வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 12 லட்சத்து 87,209 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 30,601 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம், புதிதாக நோய் பரவுவதில், பிரேசிலை முந்தி இந்தியா 2வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வரையான காலத்தில் இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே சமயம், பிரேசிலில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேருக்குத்தான் தொற்று பாதித்திருக்கிறது. அமெரிக்காவில் இதே நாட்களில், புதிதாக 4 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு நோய் பரவியிருக்கிறது.இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 49,310 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதையும் சேர்த்து 12 லட்சத்து 87,209 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இதில் 8 லட்சத்து 17,209 பேர் குணம் அடைந்துள்ளனர். 4 லட்சத்து 40,135 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 740 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கை 30,601 ஆக அதிகரித்திருக்கிறது.

More News >>