கேடில் விழுச்செல்வம்... மாடு! - நமது பாரம்பரியம் பகுதி - 4
“மாடுமனை தேடுவதும் வல்லநிலை கூடுவதும்வாலிபம் இருக்கும் வரைதான்!...” என்றார் கண்ணதாசன்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை” - என்றார் வள்ளுவர்.
இவர்கள் மாடு என்று இங்கு வலியுறுத்தி கூறுவதெல்லாம் செல்வம் என்ற பொருளிலேயே புரியப்படவேண்டும். அப்படியென்றால் அந்தக் காலத்தில் யாரொருவர் கால்நடைகளை அதிகமாக பெற்றிருந்தாரோ அவரே மிகப்பெரிய செல்வந்தர். இங்கு செல்வம் என்பதை பொருட்செல்வம் என்று மட்டும் கொள்ளலாகாது. ஆரோக்கியம், நிம்மதி, பாதுகாப்பு, என சகல சம்பத்துகளும் கொண்ட பேறு மாடுகளால் வழங்கப்பட்ட காலம் அந்தக் காலம்.
அப்படி என்ன இந்த பசுமாட்டில் சிறப்பு என்கிறவர்களுக்கு, நான் இதை ஏதோ மத ரீதியிலோ, அல்லது அரசியல் சார்பெடுத்தோ சொல்ல வரவில்லை. தாராளமான அறிவியல் ஆராய்ச்சிகளும், ஏராளமான சக விவசாயிகளின் அனுபவத்தின் மூலமும் கண்டுணர்ந்த உண்மை இது. சாதாரணமாக கோயில்களில், மற்ற இல்லங்களில் உள்ள பூஜை அறைகளில் ஒரு படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.
கோமாதா அல்லது காமதேனு என்றழைக்கப்படும் ஒரு பசு மாட்டின் மேனி முழுவதும் சகல தெய்வங்களின் உருவங்களை வரைந்திருப்பார்கள். உண்மையில், அந்தக் காலத்து, நமது முன்னோர்கள் அறிவில் உச்சம் தொட்டவர்கள். ஏனென்றால், அவர்கள் கடவுளர்களாக சித்தரித்த உருவங்களெல்லாம் உண்மையில் பசுவின் வயிற்றில் இருக்கும் நல்லது செய்யும் நுண்ணுயிரிர்கள்தான் என்பது எனது கருத்து.
அவ்வளவு நன்மை செய்யும் உயிர்கள் பசு வயிற்றில் வசிக்கின்றன. எனவேதான் பசுவயிற்றில் இருந்து வரும் எதுவும் நமக்கு நன்மை பயப்பனவாகவே உள்ளன. முதலாவதாக, பால், (நான் சொல்வது, நமது நாட்டு பசுக்களில் இருந்து கறந்தெடுத்த சுத்தமான பால்.) அது ஒரு முழுமையான உணவு. அதனால்தான் அதனை தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் நமது முன்னோர்கள் மதித்து வந்தனர்.
ஆனால், பசுவின் பலன் அதுதரும் பாலில் மட்டும்தானா? இல்லை அது நமக்கு வேண்டாத களை, புல், பூண்டைத் தின்று கழிவாக வெளியேற்றும் மூத்திரமும், சாணமும்கூட மிகுந்த மதிப்பு மிக்கவை. உலகத்தில் எந்த இயந்திரமாவது நமக்கு வேண்டாத கழிவை உண்டு மதிப்பு மிக்கப் பொருட்களை பரிசாகக் கொடுக்குமா!?
ஜீரோ பட்ஜெட் வேளாண்மை பேசும் திரு சுபாஷ் பாலேகர் அவர்கள், “ஒரு நாட்டுப் பசுவில் இருந்து கிடைக்கும் மூத்திரத்தையும், சாணத்தையும் வைத்து 35 ஏக்கர் நிலப்பரப்புள்ள வேளாண் தோட்டத்திற்குத் தேவையான எல்லாவித இடுபொருள் மற்றும் பயிர்க்காப்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் பெற முடியும் ” என்கிறார்.
என்ன அற்புதம் பாருங்கள்! அந்தக் காலத்தில் (ஏன் இப்போதும் கூட) சிவன் கோயில்களில் பசுவில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யா எனப்படும் ஒரு திரவத்தைத் தீர்த்தமாகக் கொடுப்பதுண்டு. அதைப் பற்றி, ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் திரு. நடராஜன் அவர்கள் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், பயிர், கால்நடை ஏன் மனிதருக்கு ஏற்படும் பல ஆரோக்கியக் கேடுகளையும் சுகமாக்க வல்லது 'பஞ்சகவ்யா' என்று விவரித்துள்ளார்.
ஏன், அந்தக் காலத்தில் புதுவீடு கட்டினால் பசுமாட்டைத்தான் முதலில் உள்ளே கூட்டிச்செல்வார்கள். அதன் கோமியத்தைத்தான் வீடு முழுவதும் தெளிப்பார்கள். அதன் சாணத்தைத்தான் வாசலில் மெழுகுவர்கள். அவ்வளவு கிருமி நாசினிகளாக அவை செயல்புரிந்தன. ஆனால், அவை அனைத்தும் இன்று பழங்கதைகளாகிவிட்டன. அவற்றின் மகத்துவம் மறக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீட்டெடுக்கவேண்டியது நமது கடமையல்லவா?
ஜல்லிக்கட்டைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று எல்லோரும் கொடி பிடிப்பது ஏதோ ஒரு பண்பாடு சார்ந்த புரட்சி மட்டுமல்ல, அதற்குப் பின்னே ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்பதை அனைவரும் அறிந்தாக வேண்டியது கட்டாயம். நமது கால்நடைச் செல்வங்கள் வளர வேண்டுமென்றால், காளைகள் திடமாக இருக்க வேண்டும். காளைகள் திடமாக வளர வேண்டுமென்றால், அவற்றிற்கு போதிய போஷாக்கு வேண்டும். அந்த போஷாக்கான ஊட்டத்திற்கு பொருளாதாரம் துணை செய்ய வேண்டும்.
அதற்கு இதுபோன்ற போட்டிகள் வேண்டும். தவிர இந்த போட்டி விளையாட்டுகளில் நல்ல திடமான காளைகள் தெரிவுபெறுகின்றன. அவை, திறன் மிக்க சந்ததிகளை உருவாக்குகின்றன. எனவேதான், ஆதித் தமிழன் ஜல்லிக்கட்டை போற்றி வளர்த்தான். பொங்கல் பண்டிகையின்போது, மாட்டிற்கு என தனியாக பொங்கல் வைத்து நன்றி சொன்னவன் உலகத்திலேயே தமிழன் ஒருவன்தான். ஏனெனில், அது தரும் சாணத்திலிருந்து வரும் நுண்ணுயிர்கள் அல்லாமல் வேறு எதுவும் இந்த மண்ணை வளப்படுத்த முடியாது.
தற்காலிகமாக, வெளி இடு பொருட்களான இரசாயன உரங்கள் பயன்படலாம், ஆனால் நீண்ட நிலைத்த வேளாண்மை வேண்டுமென்றால் தொழு உரம் என்று அழைக்கப்படும் சாணம் மிகவும் முக்கியம். இன்று சாணம் கிராமப்புறங்களில் கூட கிடைப்பதில்லை. ஏனென்றால் மாடுகள் இல்லை. ஏனென்று கேட்டால் பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை. சாணத்தின் சந்தை மதிப்பு பல ஆயிரம் ரூபாய். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள், தண்ணீருக்கும் பெட்ரோலுக்கும் சண்டை வருதுவது மாதிரி, ஒருநாள் மாட்டு சாணத்திற்கும் பெரிய சண்டை வரத்தான் போகிறது.
சாணத்தினை வெறும் மண்ணிற்கான இடுபொருளாக மட்டுமன்றி, எரிவாயு, விபூதி, ஊதுவத்தி, என நானாவித பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம். இன்று அவற்றிற்கான தேவை அதிகரித்தே வருகின்றன. குறிப்பாக இயற்கை விவசாயம் செய்ய விழையும் எவரும் நாட்டுப்பசுமாடு இன்றி விவசாயம் செய்யவே முடியாது. ஜிவாமிர்தம், பஞ்சகவ்யம், அக்னி அஸ்தரம், அரப்பு மோர் கரைசல் என்று, கோமியமும், சாணமும் பயன்படாத இயற்கைசார் இடுபொருள்களே இல்லை.
அந்தக் காலத்து தமிழனும் கலவைப் பாசனம், வண்டி, உழுதல், என எல்லாவற்றிற்கும் மாட்டையே நம்பி இருந்தான். ஆனால் பாவம், இன்று மாட்டை பால் கறக்கும் ஒரு மிஷினாக மட்டும் பாவித்து, பல வித கஷ்டங்களை கொடுக்கிறோம். நகர்ப் புறங்களில் பால் வற்றிய மாடுகள் (ஏன் நல்ல மாடுகள் கூட) சினிமா போஸ்டர்களையும், பிளாஸ்டிக் கவர்களையும் தின்பதைப் பார்க்கும்போது நெஞ்சு பதறுகிறது.
எனவே, நம்மால் முடிந்தவரை நமது செல்வங்களை மீட்டெடுப்போம். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் பெங்களூரு இராஜேஸ்வரி நகரில், வீட்டு கொல்லைப்புறத்தில் இரண்டு மாடுகளை வளர்க்கிறார். காலையில் வாக்கிங் போகும்போது எல்லோரும் நாயை அழைத்துச் செல்வது போல், இவர் மாட்டை அழைத்துச் செல்கிறார். அதற்காக எல்லோரும் மாடு வளர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவை அழிந்து போகாமல் முடிந்த அளவு காப்பாற்ற உதவியாக இருக்கலாம்.
ஏனென்றால்,மாடுமனை தேடுவதும் வல்லநிலை கூடுவதும்மாடுகள் இருக்கும் வரைதான்!...
- தொடரும் ................ - முனைவர் நா.லோகானந்தன்
இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்,
உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1
உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2
“மண் பயனுற வேண்டும்” - நமது பாரம்பரியம் பகுதி - 3
மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5
நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6
பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்... நமது பாரம்பரியம் - பாகம் 7
இந்தக் கட்டுரையின் ஆசிரியர், முனைவர் நா.லோகானந்தன் கர்நாடக மாநிலத்தின் தும்கூரிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருபவர். “இயற்கை வேளாண்மையின் சமுதாய மற்றும் சூழலியல் சார்ந்த தாக்கம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர். மக்களின் நலனிலும் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொள்பவர்.
அவரிடம் உங்களுக்குப் பிடித்தவேலைகள் எவையென்று கேட்டால், “மண்ணையும், மரத்தையும், மாட்டையும் நேசித்தல்” என்றும் “மற்ற நேரத்தில் பயனுள்ள பல புத்தகங்களை வாசித்தல்..” என்றும் சிரித்த முகத்துடன் பதிலளிக்கிறார். உடலளவிலும் மனதளவிலும் இன்று நாம் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் நமது பாரம்பரியத்தை நம் காலத்தோடு இணைத்து வாழாமல் போனதே எனக் கருதுபவர். அந்தவகையில் நமது பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து எழுதிவருகிறார். படித்து நாம் பயன்பெறுவோம்.