கட்சித்தாவல் சட்டத்தில் சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் ஐகோர்ட் தடை..

கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சச்சின்பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்குச் சபாநாயகருக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் தடை விதித்துள்ளதுராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட், தன்னை முதல்வராக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதைத் தொடர்ந்து, பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. இதற்கேற்ப, பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை அழைத்துச் சென்று டெல்லியில் முகாமிட்டார். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் கெலாட்டுக்கு மெஜாரிட்டி நீடிக்கிறது.

இந்த சூழலில், பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் சி.பி.ஜோஷி ஒரு நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் ஜோஷி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, சச்சின் பைலட் உள்பட 19 பேரும், ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், வரும் 24ம் தேதி வரை சபாநாயகர் ஜோஷி அந்த 19 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து, சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஐகோர்ட் தடையை எதிர்த்து, சபாநாயகர் சி.பி.ஜோஷி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட் உத்தரவில் சுப்ரீம் கோர்ட் தலையிட மறுத்தது. இந்நிலையில், இன்று(ஜூலை24), ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசையும் சேர்க்க வேண்டுமென்று பைலட் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஐகோர்ட் ஏற்றுக் கொண்டதுடன், 19 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கும் சபாநாயகருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.இதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

More News >>