தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 56 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் ஆலோசனை..
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 56 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று மாலை முடிவெடுக்கிறது.தமிழகத்தில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் மூன்று பேர் இறந்ததால், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம் 56 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
மேலும், சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ராஜினாமா செய்தனர். அவர்கள் பாஜகவுக்குத் தாவினர். அவர்களில் சிலர் இப்போது முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைச்சர்களாகி உள்ளனர்.தற்போது அந்த 25 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இன்று(ஜூலை24) மாலை நடைபெறும் கூட்டத்தில், இடைத்தேர்தல்கள் குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்பட உள்ளது.