ராஜஸ்தானில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.. பாஜகவை கண்டித்து காங். போராட்டம்..
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் அனுமதி தராததால், அரசியல் குழப்பம் நீடித்த வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்துகின்றனர்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதற்குக் காங்கிரஸ் தலைமை அசைந்து கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. இதற்கேற்ப, பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை அழைத்துச் சென்று டெல்லியில் முகாமிட்டார். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனால், 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் கெலாட்டுக்கு மெஜாரிட்டி நீடிக்கிறது. இந்த சூழலில், பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் சி.பி.ஜோஷி ஒரு நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் ஜோஷி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, சச்சின் பைலட் உள்பட 19 பேரும், ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், அந்த 19 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து, சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே, முதல்வர் கெலாட்டுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள பேர்மவுன்ட் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சட்டசபையைக் கூட்டி தனது மெஜாரிட்டியை நிரூபித்து விட்டால், அதற்குப் பிறகு 6 மாதங்களுக்கு மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்க கோர முடியாது என்று கெலாட் முடிவெடுத்தார்.இதையடுத்து, சட்டசபையைக் கூட்டுவதற்குச் சபாநாயகர் ஜோஷி முடிவு செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதற்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டார். இதனால், முதல்வர் கெலாட் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 104 பேரும் நேற்று(ஜூலை24) ராஜ்பவனில் ஆஜராகினர். ஆனால், அவர்கள் அங்குத் தர்ணாவில் ஈடுபட்டனர்.
உடனே, கவர்னர் கல்ராஜ்மிஸ்ரா தான் சட்டசபையைக் கூட்டுவது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாக முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். ஆனாலும், அவர், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கும் பாஜக+ சச்சின் பைல் குரூப்பிற்கு கால அவகாசம் கொடுப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதே சமயம், பேர்மவுன்ட் ஓட்டல் உரிமையாளர்கள், கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு நெருக்கமானவர்கள் என்பதால், ஓட்டல் நிர்வாகத்தை மிரட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து வெளியேற்றவும் மத்திய பாஜகவால் முடியவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. கொரோனா காலத்திலும் ஆட்சியைப் பிடிப்பதில் குறியாகச் செயல்படும் பாஜகவால், ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.