தமிழக அரசியலில் அடுத்த சூறாவளி - தனிக்கட்சி தொடங்குகிறார் டிடிவி தினகரன்
By Lenin
இம்மாதம் (மார்ச்) 15ஆம் தேதி டிடிவி தினகரன், மதுரையில் புதுக்கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுக இரு அணிகளாக பிரிந்த பிறகு அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உடன் 18 எம்.எல்.ஏக்கள் உடன் வந்தனர். இதனையடுத்து, கட்சித்தாவல் தடைசட்டத்தின்படி அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இதற்கிடையில், நடந்து முடிந்த கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேட்சையாக வெற்றிபெற்றதை அடுத்து தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக கூறப்பட்டது. மேலும், அதிமுக ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும், தக்க நேரத்தில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு அபார வெற்றியை பெற்றுத் தந்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 வாரத்திற்குள் கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, தனது கட்சியின் பெயர்களாக 3 பெயர்களை தினகரன் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.
அனைத்து இந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் என்ற 3 பெயர்களை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தான், மார்ச் 15ஆம் தேதி வியாழக்கிழமை, மதுரை மாவட்டம் மேலூரில் நடக்கவுள்ள விழாவில், தனது கட்சியின் கொடி மற்றும் பெயரை டிடிவி.தினகரன் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.