கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கும் பாஜக.. ராகுல்காந்தி கடும் தாக்கு..
ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டணம் வசூலித்து கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கும் ஏழைகளுக்கு எதிரான அரசு என்று மத்திய பாஜக அரசை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சீன ஆக்கிரமிப்பு பிரச்சனை, கொரோனா பரவல் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், ராகுல்காந்தி இன்று(ஜூலை25) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ஜூலை 9ம் தேதி வரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் மூலம் ரூ.429.90 கோடி வருவாயை ரயில்வே நிர்வாகம் ஈட்டியிருக்கிறது. கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கும் ஏழைகள் விரோத அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த மே 1ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை 4496 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளோம். இதற்கு ரயில்வே நிர்வாகம் சுமார் ரூ.2400 கோடி செலவிட்டிருக்கிறது. ஆனால், கட்டணமாக ரூ.429 கோடிதான் வசூலித்திருக்கிறது என்று தெரிவித்தார்.