ம.பி. முதல்வருக்கு கொரோனா பாதிப்பு..
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் 13.36 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து அவர் ட்விட்டரில் போட்ட பதிவில், எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை செய்து கொண்டேன். இதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால், என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருமே தங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.மேலும் அவர், நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் இல்லாத நேரத்தில் உள்துறை அமைச்சர் நாரோட்டம் மிஸ்ரா மற்றும் அமைச்சர்கள், எனது பணிகளைக் கவனிப்பார்கள்.
கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தினமும் மாலையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வந்தேன். இனி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு செய்ய முயற்சிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 2 முறை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதே சமயம், கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.