பெயிலுக்கு `நோ.. போக்ஸோவுக்கு `யெஸ் - கைதாகும் `சர்ச்சை நாயகி ரெஹானா பாத்திமா

கேரளாவின் சர்ச்சை நாயகி எனச் சொல்லும் அளவுக்குச் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் ரெஹானா பாத்திமா. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது ரெஹானா பாத்திமா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், பக்தர்கள் போராட்டங்களால் அவர்களால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. இதன்பின், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் விமர்சனங்களிலிருந்து தப்பாமல் இருந்து வந்தார் பாத்திமா.

சமீபத்தில் அதேபோல் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார் பாத்திமா. Body Art and Politics என்ற பெயரில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அரை நிர்வாண கோலத்தில் பாத்திமா இருக்க அவரின் இரண்டு குழந்தைகளும் அவரின் உடல்மீது ஓவியம் வரைந்தனர். மேலாடை இல்லாமல் பாத்திமா அந்த வீடியோவில் குழந்தைகள் முன் இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர்மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் முன்ஜாமீன் கோரி கேரள ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாத்திமா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ``வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதற்குக் காரணம் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியைக் கற்பிப்பதே அவரது நோக்கம். குழந்தைகள் குறித்த அநாகரீகமான அல்லது ஆபாசமான பிரதிநிதித்துவம் வீடியோவில் இல்லை என்பதால் பாத்திமா மீது போக்ஸோ சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவிட முடியாது" எனக் கூறினார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ``பாத்திமாவுக்கு அவரின் தத்துவத்தை அவரது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஆனால் அது அவரின் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதேநேரம் இதுபோன்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு எல்லா குழந்தைகளுக்கும் பாலியல் கல்வியைக் கற்பிக்க முயற்சிப்பதாகக் கூறி தப்பிக்க முயல்வதை ஏற்க முடியாது. இது உடன்படும் நிலையில் இல்லை. இந்த வழக்கில் பாத்திமாவுக்கு ஜாமீனும் தர முடியாது. அதே நேரம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்வதை நீதிமன்றம் தடை செய்யாது" எனக் கூறி உத்தரவிட்டுள்ளார்.

More News >>