தமிழகத்தில் ஒரே நாளில் 6986 பேருக்கு கொரோனா.. 85 பேர் உயிரிழப்பு..
தமிழகத்தில் நேற்று மட்டுமே 6986 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று(ஜூலை26) ஒரே நாளில் 6986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 75 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 13,723 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5471 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 56,526 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 85 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்தது.சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1155 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 94,695 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 501 பேருக்கும், காஞ்சிபுரம் 363, மதுரை 209, திருவள்ளூர் 480 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 12,266 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9805 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 11,876 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கோவை 220, திண்டுக்கல் 203, கன்னியாகுமரி 212, தேனி 216, திருவண்ணாமலை 176, தூத்துக்குடி 248, நெல்லை 186, விழுப்புரம் 201, விருதுநகர் 385 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதுமே தற்போது கொரோனா பரவி வருகிறது. இது வரை 2 லட்சத்து 13 ஆயிரம் பேரில் ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.