காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ராமதாஸ் கூறும் வழிமுறை

மிகப்பெரிய போராட்டம்தான் காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படுவதற்கும் வகை செய்யும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் அமைக்க முடியாது என்பதை மத்திய அரசு வேறு வேறு வார்த்தைகளில் கூறிவிட்ட பிறகும், காவிரிப் பிரச் சினையில் உழவர்களின் நலனைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக ஆட்சியாளர்கள் வெற்று வசனங்களைப் பேசி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் காலம் கடத்தும் செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்க தாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வி‌ஷயத்தில் தமிழகத்திற்கு இப்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பின்னடைவு. இதை உணராலோ, அல்லது உணர்ந்தும் மத்திய அரசின் துரோகத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு துணிச்சல் இல்லாமலோ ஆட்சியாளர்கள் அமைதியாக அடங்கிக்கிடப்பது வெட்கக் கேடானது ஆகும்.

ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி விவகாரம், உயர்நீதி மன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2006-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 12-க்கும் அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றின் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மீண்டும், மீண்டும் தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? அதுவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை தாமதப்படுத்தும் செயலாகவே அமையும்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகங்களை தமிழக ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலகி அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை ஏற்படுத்துதல், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது போன்ற மிகப் பெரிய போராட்டத்தை உழவர்களையும், மக்களையும் முன்னிறுத்தி நடத்துதல் ஆகியவைதான் காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படுவதற்கும் வகை செய்யும். எனவே, தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசின் துரோகத்தை தூக்கி சுமக்காமல் அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ளும் படி வலியுறுத்துகிறேன்.

More News >>