மலேசிய அரசியலில் `உச்ச சக்தி.. பேராசையால் சறுக்கிய `நஜீப் சாம்ராஜ்யம்!

முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்.. 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஊழல் வழக்கில் 12 வருடச் சிறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மலேசியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் நஜீப். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சிறைச் செல்லும் அளவுக்கு என்ன நேர்ந்தது. ஒரு பெரிய பிளாஷ்பேக்..மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ராசாக்கின் 6வது மகன் தான் இந்த நஜீப் துன் ரசாக். நஜீப்பின் குடும்பமே பாரம்பரிய அரசியல் குடும்பம். மலேசியாவின் அரசியலை, வளர்ச்சியை தீர்மானித்தால் நஜீப்பின் குடும்பத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அந்த அளவுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மலேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர் என்றால் மிகையல்ல. எல்லா அரசியல்வாதிகளின் பிள்ளைகளைப் போலவே நஜீப்பின் இளமை வாழ்க்கையும் அமைந்தது. ஆனால் 23வது வயதில் அவரது வாழ்க்கையில் அந்த பேரிடியாய் வந்து விழுந்தது அந்த செய்தி. ஆம், நஜீப்பின் தந்தை ராசக் மரணச் செய்திதான் அது. உடல்நலக் குறைவால் பிரதமர் அலுவலகத்திலேயே மரணமடைந்தார்.

இதன்பின், நஜீப் அரசியலில் கால்பதிக்க வேண்டிய கட்டாயம். சிறுவயது முதலே அரசியலில் ஆர்வம் இருந்தாலும், தந்தையின் மரணத்தால் 23 வயதிலேயே தேர்தலைச் சந்தித்தார் நஜீப். தந்தையின் மறைவால் காலியாக இருந்த பெனாக் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று மலேசியாவின் இளம் எம்பியாக தேர்வானார். இதன்பின் அரசியலில் இவருக்கு ஏறுமுகம் தான். அரசியலில் படிப்படியாக உயர்ந்தார். மாகாண முதல்வர், பாதுகாப்புத்துறை, கல்வித்துறை அமைச்சர் என 1980 - 90களில் பதவிகளின் உச்சத்தைத் தொட்டார்.

2004ல் துணைப் பிரதமர் தேடி வந்தது இவருக்கு. இதற்கெல்லாம் ஒருபடி மேலாகத் தனது தந்தையை மலேசிய அரசியலில் உச்ச சக்தியாக உருமாறினார். தந்தை வகித்த பிரதமர் நாற்காலி 2009ல் இவரது கைவசம் வந்தது. பத்து ஆண்டுகள் பிரதமராகக் கோலோச்சிய நஜீப்புக்கு அவரது ஆட்சியின் இறுதியில் வந்துசேர்ந்தது சிக்கல்.

4.5 பில்லியன் ஊழல் `சிக்கல்'!

மலேசியாவின் 6வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களில் அரசின் துணையோடு செயல்படும் வகையில் 'மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்' என்ற இண்டஸ்ட்ரியை தொடங்கினார். 'உலகளாவிய பங்குதாரர்களை மலேசியாவில் இறக்குவது, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தான் இந்த தொழிலகத்தின் முக்கிய நோக்கம். (நமது நாட்டில் இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர் நஜீப்). இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் இந்த இண்டஸ்ட்ரியின் ஓனர். நாட்டின் பிரதமரே ஒரு பெரிய தொழிலகத்தை அரசின் துணையுடன் முறைகேடாகத் தொடங்கினார்.

அதுமட்டுமில்லாமல், இந்த தொழிலகத்தின் மூலம் 4.5 கோடி பில்லியன் அமெரிக்க டாலர்களை ஊழல் செய்ததாக ஒரு சில ஆண்டுகளிலேயே நஜீப்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியது அமெரிக்க உளவு அமைப்பு. இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் வலுசேர்க்க, நஜீப் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. விளைவு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இறுதியில் நஜீப் ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களில், 681 மில்லியன் டாலர்கள் நஜீப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதில் சுமார் 30 மில்லியன் டாலர்களை அவர் தனது மனைவிக்கு நகைகள் மட்டுமே வாங்கச் செலவழித்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. `நஜீப்பின் 1எம்.டி.பி ஊழல்' என்று உலக ஊடகங்கள் எழுதி தீர்த்தன.

அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியதால் அடுத்து வந்த 2018 தேர்தலில் மண்ணைக்கவ்வினார். மலேசியாவின் `ரியல் காலா' என அறியப்படும் மகாதிர் முகமது பிரதமரானார். அவ்வளவுதான் காட்சிகள் மாறின. ஒருசில நாள்களில் கைது செய்யப்பட்டார் நஜீப். அவர் வீட்டில் அதிரடியாகச் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் ரூ.1,872 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ரொக்கம் மட்டும் ரூ.205 கோடி. இதுபோக 1,400 நெக்லஸ், 2,200 மோதிரங்கள் என மொத்தம் 12 ஆயிரம் நகைகள், இது தவிர, 567 விலை உயர்ந்த ஹேண்ட்பேக்குகள், 423 கைக்கடிகாரங்கள், 234 ஜோடி சன்கிளாஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையில் இவ்வளவு கிடைத்ததை அறிந்த மலேசிய மக்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். போதாக்குறைக்கு ஊழல் பணத்தில் ஹாலிவுட் படத்தில் முதலீடு, ஆடம்பர சொத்துகள் வாங்கினார், தனிப் படகு வாங்கினார் என்று சர்ச்சைகள் மொய்க்க ஆரம்பித்தது.

ஆனாலும் நஜீப் இந்த வழக்கைப் பற்றி கொஞ்சம் கூட சட்டைசெய்யவில்லை. நீதிமன்றத்தில் விசாரணையின்போது கூட, எந்தவிதக் குற்றச்சாட்டையும் நஜீப் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றக் கூண்டில் நின்று, ``என்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்" என்றார். பின்னர் ஜாமினில் வெளிவந்தாலும் வழக்கு நடந்துகொண்டு இருந்தது. இந்நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 12 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ, பணத்தின் மீதான பேராசையால் தனது அரசியல் வாழ்வு மட்டுமல்ல, தனது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளார் நஜீப்.

முன்பு ஜாமினில் வெளிவந்த போது, நஜீப் உதிர்த்த வார்த்தைகள் இவை. ``மலேசிய நாட்டு மக்களுக்காக நான் 42 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். எனது உழைப்புக்குச் சிறை தான் பரிசு என்றால் அதை மனதார ஏற்கிறேன்" என்றார். ஆம்... இனி சிறையே நஜீப்பின் எதிர்காலம்!

More News >>