ஒரே டுவீட்.. இரண்டு மாங்காய்... நடிகர் சூர்யாவின் `அரசியல் விளையாட்டா இது..?

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ் சினிமாவைத் தாண்டி, தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு மற்ற நடிகர்களைக் காட்டிலும் மவுசு இருக்கிறது. நடிப்பைத் தாண்டி சமூகப் பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. குறிப்பாக `அகரம்' மூலம் பல ஆண்டுகளாக கல்வி சேவைகள் செய்து வரும் சூர்யா சமீபகாலமாக அரசியல் குறித்தும் பேசத் தொடங்கியுள்ளார். நீட், மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகளின் போது மத்திய அரசை நேரடியாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பும், வரவேற்பும் ஒரு சேர கிடைத்தது. அப்போது நடந்த `காப்பான்' பட விழாவில், `சூர்யாவின் பேச்சு மோடிக்கு கேட்டு விட்டது'' என்றார் ரஜினி.

இதன் பின்பும், 8ம் வகுப்பு பொதுத் தேர்வு, சாத்தான்குளம் உள்ளிட்ட சம்பவங்களிலும் சூர்யா தன் குரலை வலுவாக மாநில அரசுக்கு எதிராக வெளிப்படுத்தினார். இந்நிலையில், தமிழகத்தின் தற்போதையை பிரச்சனைகளில் முக்கியமானது மத்திய அரசின் EIA தாக்க அறிக்கை விவகாரம். மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவிற்கு யாரும் எதிர்பாராத விதமாக சூர்யாவின் தம்பி கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். EIA அறிக்கையில் உள்ள குளறுபடிகளை குறிப்பிட்டு மத்திய அரசை பல்வேறு வகையில் அந்த அறிக்கையில் தாக்கி இருந்தார் கார்த்தி. இது விவாதமாக மாறியுள்ள நிலையில், தற்போது தம்பி கார்த்திக்கு ஆதரவாக டுவீட் செய்துள்ளார் சூர்யா.

அவர் போட்டது ஒரே டுவீட்தான். ஆனால் அதில் இரண்டு விஷயங்களை பேசியிருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். EIA விவகாரத்துடன் தமிழகத்தின் மற்றொரு ஹாட் டாப்பிக் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் கொச்சைப்படுத்தியதாக கூறப்பட்ட விவகாரம். இந்த விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்துக்கு பின்னால் இருப்பது திமுக தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இப்படியான நிலையில், தான் இந்த இரண்டு விவகாரங்களையும் இணைத்து, ``பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.." என்று தனது டுவீட்டில் விமர்சனம் செய்துள்ளார் சூர்யா.

More News >>