அடுத்த `தல ஹிட்மேன் தான்.. அடித்துக்கூறும் சுரேஷ் ரெய்னா!
எல்லோரும் `தல' தோனியின் ஓய்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்க, அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ரெடியாகி கொண்டிருக்கிறார். இதற்கிடையே, தற்போது இந்திய அணியில் அடுத்த தோனி யார் என்று பேசியுள்ளார் பிரபல வீரர் சுரேஷ் ரெய்னா. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரெய்னா, ``ரோஹித் சர்மாவுக்கு இந்தியாவின் அடுத்த தோனி ஆகக்கூடிய தகுதி இருக்கிறது என நினைக்கிறேன். நான் இப்படிக் கூறுவதற்குக் காரணம், ரோஹித் தோனி போலவே அமைதியாக இருக்கிறார். மற்றவர்கள் பேச்சுக்கு மதிப்பளித்து அதைக் கூர்ந்து கவனிக்கிறார். இதைவிட வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். கடினமான நேரங்களில் அணியை முன்னின்று வழி நடத்துகிறார்.
அணிக்கு முக்கியம் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் ஒற்றுமை தான். ரோஹித் இதை நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். ட்ரெஸ்ஸிங் ரூம் ஒற்றுமைக்கு ஒரு பங்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார். இதுவே அவரை அனைத்துக்கும் தகுதியானவர் என்பதை நிரூபிக்கும். எல்லா வீரர்களும் அணியின் கேப்டன் என்ற நினைப்பு ரோஹித்திடம் இருக்கிறது. அவருடைய தலைமையில் வங்கதேசத்தில் நடந்த ஆசியக்கோப்பைத் தொடரில் நான் விளையாடியுள்ளேன்.
இத்தொடரில் இடம்பெற்றிருந்த ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் போன்ற புதுமுக வீரர்களுக்கு அவர் எவ்வாறு தன்னம்பிக்கை அளித்தார் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். ரோஹித் தலைமையில் வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள். அவரின் தலைமையை ரசிக்கிறார்கள். அணியைக் கவனிக்க ஒருத்தர் இருக்கிறார் என்றாலே மற்ற வீரர்கள் தங்கள் ஆட்டத்தை ரசித்து ஆடுவார்கள். ரோஹித்தை பொறுத்தவரை அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்று காட்டியுள்ளார். தோனி, ரோஹித் இருவருமே ஒரே சுபாவம் கொண்டவர்கள். ஒரு கேப்டன் மற்றவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கிறார் என்றாலே, அணியில் இருக்கும் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். என்னுடைய பார்வையில் இருவருமே `தல'தான்" எனக் கூறியுள்ளார்.