ராஜஸ்தான் சட்டசபையைக் கூட்ட கவர்னர் அனுமதி.. கெலாட் அரசு தப்புமா?

ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, ஒரு வழியாக அனுமதி அளித்துள்ளார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்கக் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அது நடக்காததால், அதிருப்தி தலைவராக மாறினார். பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது.இதையடுத்து, பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட்டுக்கு எதிராகத் திரும்பினார். ஆனாலும், முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் கெலாட்டுக்கு மெஜாரிட்டி இருக்கிறது. எனினும், கடந்த சில வாரங்களாக அங்கே அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சட்டசபையைக் கூட்டி தனது மெஜாரிட்டியை நிரூபித்து விட்டால், அதற்குப் பிறகு 6 மாதங்களுக்கு மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோர முடியாது என்று கெலாட் முடிவெடுத்தார். சட்டசபையைக் கூட்டுவதற்குச் சபாநாயகர் ஜோஷி முடிவு செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதற்கு அனுமதி தர மறுத்து முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். அதன்பின், கொரோனா குறித்து விவாதிக்கச் சட்டசபையைக் கூட்ட வேண்டுமென்று கவர்னருக்கு முதல்வர் கெலாட் கடிதம் அனுப்பினார். அதற்கும் கவர்னர் அனுமதி மறுத்தார். 3வது முறையாகக் கடிதம் அனுப்பிய முதல்வர் கெலாட், ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை வலியுறுத்தினார். அப்படியும் கவர்னர் அனுமதி மறுத்தார்.

மேலும், கொரோனா பரவுவதால், சட்டசபையைக் கூட்ட முடியாது போல் காட்டுவதற்காக புதிய யுக்தியைக் கையாண்டார். அதாவது, கொரோனா பரவுவதால் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவையே ரத்து செய்வதாக அறிவித்தார்.ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று 3வது கட்ட தளர்வுகளை அறிவித்த போது, சுதந்திர தின விழாக்கள் கொண்டாடத் தடையில்லை என்று அறிவித்துள்ளது. இதையடுத்து, கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா திடீரென நேற்றிரவு புதிய அறிவிப்பு வெளியிட்டார். அதில், முதல்வர் கெலாட்டின் கோரிக்கையை ஏற்று ஆக.14ம் தேதியன்று சட்டசபையைக் கூட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இந்த சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(ஜூலை30) ஜெய்ப்பூரில் உள்ள பேர்மவுன்ட் ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த ஓட்டலில்தான் கடந்த 10 நாட்களாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய கூட்டத்திற்குப் பிறகு அனைவரிடமும் கெலாட் அரசுக்கு ஆதரவாகக் கடிதம் பெறப்படும் என்றும், அவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் தரப்பில் பேசப்படுகிறது. அவர்களை வெளியே அனுப்பினால் கட்சி தாவி விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டால், அவர்கள் ஆக.14 வரை ஓட்டலிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

More News >>