இ-பாஸ் கட்டாயம் பொதுப் போக்குவரத்துக்கு தொடரும் தடை.. புதிய தளர்வுகள் என்னென்ன?!
நாளை மாலையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் புதிய ஊரடங்கு குறித்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு குறித்த அறிவிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவித்தவர், அதற்கான தளர்வுகளையும் அறிவித்தார். ``தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி. முன்னதாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். 50% வாடிக்கையாளர்களை உணவகங்களில் அனுமதிக்கலாம். அதேநேரம் வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.
இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களுக்குச் செல்லவும் இ-பாஸ் கட்டாயம். அதேபோல் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும். மெட்ரோ ரயில், பயணிகள் ரயில், விமானப் போக்குவரத்துக்கு முதலியவற்றுக்கான தடை தொடர்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல் படி சுதந்திர தினத்தை சமூக இடைவெளி விட்டுக் கொண்டாடலாம்.
50% பணியாளர்களுடன் செயல்படும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் 75% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மால்கள், சினிமா திரையரங்குகள், தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், கேளிக்கை கூடங்கள், ஜிம்கள், பார்கள் ஆகியவற்றுக்குத் தடை தொடர்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.