அயோத்தி ராமர் கோயில் விழா.. கொரோனா பரிசோதனை தீவிரம்..

அயோத்தியில் வரும் 5ம் தேதி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையடுத்து, அயோத்தி முழுவதும் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தலைமை பூசாரி மற்றும் பல போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு வரும் ஆக.5-ம் தேதி ராமர் கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக, கொரோனா காலத்திலும் அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு கொரோனா பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ராமர் கோயில் தலைமை பூசாரி பிரதீப்தாஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. தினசரி பூஜைகளைச் செய்யும் முக்கிய 4 பூசாரிகளில் இவரும் ஒருவர். அவரை உடனடியாக தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், அயோத்தியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 16 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி கலெக்டர் அனூஜ்ஜா கூறுகையில், அயோத்தியில் 5ம் தேதி நடைபெறும் விழாவையொட்டி, தினம்தோறும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நேற்று(ஜூலை30) நூறு பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 4 போலீசார், ஒரு பூசாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வெளியூரிலிருந்து திரும்பி வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பூமி பூஜை விழா முடியும் வரை பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும் என்றார்.

More News >>