நுரையீரலில் தொற்றுநோய்.. பிரேசிலை பதறவைக்கும் அதிபரின் `உடல்நிலை

பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ... கொரோனா நோயால் உலகம் ஸ்தம்பித்துக் கிடக்க, இவர் மட்டும் மாஸ்க் அணியாமல், தொற்று குறித்த பயம் இல்லாமல் இருந்ததுடன், கொரோனா சாதாரண காய்ச்சல் தான் என ஸ்டேட்மென்ட் விட்டார். மற்ற நாடுகளைப் போல இவர் தன் நாட்டு மக்களையும் மாஸ்க் அணியுங்கள் என வற்புறுத்தவுமில்லை, ஊரடங்கு பிறப்பிக்கவுமில்லை. இதனால் சமீபத்தில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். ஆனால் விதி சும்மா விடுமா.. போல்சனாரோவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஜூலை 7-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து விபரீதத்தை உணர்ந்து அதிபர் மாளிகையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அங்கேயே அவருக்குச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதன்பின் எடுக்கப்பட்ட சோதனைகளில் தொடர்ந்து அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. மூன்று முறை தொடர்ந்து பாசிட்டிவ் என வந்த நிலையில் நான்காம் முறைதான் நெகட்டிவ் என வந்தது. இதனையடுத்து மகிழ்ச்சியாக இந்த செய்தியைத் தனது நாட்டு மக்களுக்கு டுவீட் செய்தார்.

ஆனால் இந்த சந்தோஷம் சில மணிநேரங்கள் கூட நிலைக்கவில்லை. கொரோனாவை எதிர்த்து வெற்றிகண்டாலும், தற்போது போல்சனாரோ நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்திப் பேசியுள்ள போல்சனாரோ, ``கொரோனா நெகட்டிவ் என வந்த பிறகும் பலவீனமாக இருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. இதையடுத்து நடந்த மருத்துவ சோதனையில், என் நுரையீரலில் ஒருவித தொற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, போல்சனாரோ மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரும் அதிபர் மாளிகையில் தன்னை தானே தனிமைப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அதிபரின் உடல்நிலை குறித்து மோசமான தகவல்கள் வருவதால் பிரேசில் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

More News >>