இந்தியாவை விட அமெரிக்காவில் 6 மடங்கு பரிசோதனை..

இந்தியாவை விட 6 மடங்கு அதிகமாக கொரோனா பரிசோதனை செய்திருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார். உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமான அளவுக்கு கொரோனா பரிசோதனைகளைச் செய்திருக்கிறோம். இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு 11 மில்லியன்(1.1கோடி) மக்களுக்குத்தான் சோதனை செய்திருக்கிறார்கள். நாம் அதை விட 6 மடங்கு அதிகமாக 60 மில்லியன்(6கோடி) மக்களுக்குப் பரிசோதனை செய்திருக்கிறோம். நாம்தான் கொரோனா பரவலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கேலே மெக்னானி கூறுகையில், அமெரிக்காவில் 5 கோடி 90 லட்சத்தைத் தாண்டி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு கோடி 40 லட்சம் சோதனைகள்தான் நடந்துள்ளது. அமெரிக்காவை விட இந்தியாவின் மக்கள் தொகை 4 மடங்கு அதிகம். அதனால், நாம்தான் கொரோனா பரிசோதனைகளைச் சிறப்பாகச் செய்திருக்கிறோம் என்றார்.அதே சமயம், இந்தியாவில் இன்றைய கணக்குப்படி, ஒரு கோடியே 93 லட்சத்து 58,659 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

More News >>