360 யானைகள் உயிரை பறித்த நச்சு `நீர்.. போட்ஸ்வானா யானைகள் இறப்பின் பின்னணி!
யானைகள் தேசம் என அழைக்கப்படும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் சுமார் 1.50 லட்சம் யானைகள் இருக்கின்றன. இந்த யானைகள் அனைத்தும் ஆப்பிரிக்க யானைகள் இனத்தைச் சேர்ந்தவை. இதற்கிடையே, போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ (Okavango) என்ற காட்டுப் பகுதியில் கடந்த 3 மாதமாக நூற்றுக்கணக்கில் யானைகள் செத்து மடிந்தன. பிரிட்டனைச் சேர்ந்த நியால் மெக்கேன் இந்த யானைகளின் உயிரிழப்பை உறுதி செய்ததுடன், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
உயிரிழந்த யானைகள் அனைத்தும் தங்கள் முகம் தரையில் படும்படியும், இறப்பதற்கு முன்பு ஒரே இடத்தில் வட்டமாக நடந்தும் உயிரிழந்தது தெரியவரவே யானைகளின் இறப்பில் சந்தேகம் எழுந்தது. போட்ஸ்வானா அரசோ, வேட்டைக்காக யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியது. அப்படி வேட்டைக்காகக் கொல்லப்பட்டால், இறந்த யானைகளில் தந்தங்கள் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி எந்த யானையிலும் தந்தங்கள் வெட்டப்படவில்லை. இது கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்த, இறந்த யானைகளின் மாதிரிகளை எடுத்து பல்வேறு நாடுகளில் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதன் முடிவுகள் தற்போது வந்துள்ளன. அதில், ``இறந்த யானைகள் அனைத்துக்கும் தொற்று நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. யானைகள் அனைத்தும் இயற்கையான நச்சு மூலமே உயிரிழந்துள்ளன. ஒரே இடத்தில் தேங்கியிருக்கும் நச்சு நீரை யானைகள் பருகி அதன்மூலம் யானைகளின் உடலைப் பாதித்து இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இதையடுத்து, நீர்நிலைகளிலிருந்து உருவாகும் நச்சுகளை ஆராயத் திட்டமிட்டுள்ளோம்" என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.