பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகிறது.. விஷாலுக்கு நிர்வாக பொறுப்பில் இடம் கிடையாது?
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பழம் பெரும் சங்கம். மறைந்த படத் தயாரிப்பாளர்கள் கே ஆர் ஜி, ராமநாராயணன், இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட பலர் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.இந்த நிலையில் தான் நடிகர்களும் சொந்தமாகப் படங்கள் தயாரிக்கத் தொடங்கினார்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், நாசர், விஷால் எனப் பலர் படத் தயாரிப்பில் இறங்கினார்கள். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் இவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினர்கள் ஆனார்கள்.கடந்த முறை நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட்டு தலைவர் ஆனார். அதன்பிறகு பல்வேறு சம்பவங்கள் சங்கத்திற்குள் நடந்தது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது, ஏற்கனவே நடந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.
முன்னதாக விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழுவைப் புகாரின் பேரில் கலைத்து விட்டுத் தனி அதிகாரி தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.அடுத்து நடக்கவுள்ள தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை சுமூகமாக நடத்தி ஒரு மனதாக நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று டைரக்டர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அது ஏற்கப்படாமல் இரண்டு அணிகள் போட்டிக்குத் தயார் ஆகின. இந்நிலையில் மீண்டும் விஷால் தலைமையிலும் ஒரு அணி போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்ப வில்லை.தற்போது இயங்கி வரும் தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் தற்போது படம் தயாரிப்பவர்கள் சுமார் 200 பேர் தான் இருப்பார்கள். மற்றவர்கள் படங்கள் எடுக்காமல் உறுப்பினராக இருக்கிறார்கள் அல்லது படம் எடுத்து நஷ்டமடைந்தவர்கள்.
சங்கம் என்று வரும்போது அது ஆளும் அரசுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் அப்போது தான் சினிமாவுக்கு சலுகைகள் பெற முடியும் ஆனால் நடிகர் விஷால் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியலில் போட்டியிடுகிறார் இதனால் அரசின் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாகச் சங்கத்தில் பலர் எண்ணுகின்றனர்.இந்த நிலையில் தற்போது படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு புதிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் உருவாக்க உள்ளதாகக் கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. தற்போது படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள், அச்சங்கம் பாரதிராஜா தலைமையில் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. இது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.