20 லட்சம் பேர் வேலை இழப்பு 100க்கும் மேற்பட்டோர் தற்கொலை.. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி அதிர்ச்சி தகவல்..
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் ஆ. பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவிட்-19 நோய்த் தொற்று காரணமான ஊரடங்கு 135நாட்களைக் கடந்து 5வது மாதத்தை எட்டவிருக்கும் அதே நேரம் தளர்வுகள் பலவற்றை அறிவித்து ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் நீட்டித்துக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்துதவித்து வரும் தொழிலாளர்கள் நலனைக் காத்திடும் வகையில் தலைவர் நம்மவரின் வழிகாட்டுதல் அடிப்படையில் பல்வேறு விசயங்களை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி முன்னெடுக்க இருக்கிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்கள் முற்றிலுமாக முடங்கிப்போன நிலையில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், பயணங்கள் எல்லாம் கொரோனாவின் பெயரைச் சொல்லிமுடக்கப்பட்டுவிட்டதால் ஆட்டோ, கார், வேன், டாக்சி உள்ளிட்ட பல்வேறு இலகுவாக வாடகை வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்கள் என சுமார் 20லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றிலுமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அரசுப் பணிகளை எதிர்பார்த்துக் காத்திராமல் சொந்தக் காலில் நின்று, சுயமாக வருமானம் ஈட்டிட எண்ணி வாகன ஓட்டுநர் பணியையும், புகைப்பட, ஒளிப்பதிவு தொழிலையும் தேர்ந்தெடுத்தவர்கள் இந்த பேரிடர் காலத்தில் சந்தித்து வரும் பிரச்சினை களை தீர்க்க அரசு இதுவரை முன் வராதது வேதனையளிக்கிறது.கடந்த 5மாதங்களாகத் தொழில்கள் முற்றிலுமாக முடங்கிப் போனதால் கடனில் வாங்கிய வாகனங்களுக்கான மாத தவணையைச் செலுத்த முடியாமல் நிதி நிறுவனங்கள் அளித்து வரும் நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மன அழுத்தம் ஏற்பட்டு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களும், வாடகை வாகன உரிமையாளர்களும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் கடும் அதிர்ச்சியைத் தருகிறது.
இக்கட்டான தருணத்தில் தொழிலாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் மனித நேயமின்றி கந்து வட்டிக்காரர்கள் போலச் சர்வாதிகார போக்கோடு நடந்து கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.பொது போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ள இப்பேரிடர் காலத்தில் ஏற்கனவே நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் அதன் தவணைகளுக்காக நெருக்கடி கொடுத்து வரும் அதே சமயம் ஊரடங்கு காரணமாக இயக்கப்படாமல் இருக்கும் வாகனங்களுக்கான சாலை வரியைச் செலுத்தவும், தாமதமாகச் செலுத்தும் சாலை வரியோடு அபராதத்தொகை சேர்த்து இரட்டிப்பு தொகையாகச் செலுத்த வேண்டும் என அரசே நிர்பந்தம் செய்வது தொழிலாளர்களின் கழுத்தை நெறிக்கும் செயல் மட்டுமல்ல, வருமானமின்றி தவித்து வரும் அவர்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். எனவே கோவிட்-19 பேரிடர் காலமான தற்போது வாழ்வாதாரம் இழந்து திக்கு திசை தெரியாமல் தவித்து கொண்டிருக்கும் ஆட்டோ, கார், வேன், டாக்சி உள்ளிட்ட இலகுவாக வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் மற்றும் புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவர்களின் குடும்பத்திற்கு உதவித் தொகையாக 20ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு, தற்போதைய சூழலில் இயக்கப்படாத இலகுவாக வாடகை வாகனங்களுக்குச் செலுத்த வேண்டிய சாலை வரியை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தவணைகளையும், டிசம்பர் மாதம் வரையிலான தவணையையும் தமிழக அரசே செலுத்திட ஆவண செய்ய வேண்டும்.
வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்து வதில் செப்டம்பர் மாதம் வரை தள்ளி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டும் அதனை நிதி நிறுவனங்களோ, வங்கிகளோ முறையாக கடைப்பிடிக்காமல் இன்றளவும் நெருக்கடி கொடுத்து, செலுத்தாத தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி எனக் கணக்கிட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன. எனவே வங்கிக் கடனில் இருக்கும் இலகுவாக வாடகை வாகனங்களுக்கான மாத தவணையை டிசம்பர் மாதம் வரை தள்ளிவைத்து நிலுவை தவணை தொகையை ஜனவரி 2021முதல் வட்டியின்றியும், தாமத,அபராத கட்டணமின்றி செலுத்திட வசூலிக்க வங்கிகளை அறிவுறுத்த வேண்டும். அதனைப் பின்பற்றாத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
அத்துடன் கடந்த 5மாதங்களில் காலாவதியான பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க 2021 ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திடவும்., தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க உள்ள "ஈ.பாஸ்" நடை முறையில் இலகுவாக வாடகை வாகனங்களுக்கு தளர்வுகள் அளிப்பதின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடமுடியும்.மேலும் ஊரடங்கு காரணமாக பொது விழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்கள் வாழ்விலும் ஒளியேற்றிடத் தமிழக அரசு தாமதமின்றி பரிசீலித்து விலக்கு அளிக்க முன் வர வேண்டும் எனத் தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி - தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் ஆ. பொன்னுச்சாமி தெரிவித்திருக்கிறார்.