பிரபல நடிகர் தற்கொலை வழக்கை விசாரிக்க வந்த போலீஸார் சுற்றிவளைப்பு.. கொரோனா முகாமில் அடைத்தனர்..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை பாந்தர நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சுஷாந்த்தின் தந்தை பீகார் மாநிலம் பாட்னாவில் புதிய புகார் கொடுத்தார் அதில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி சுஷாந்தை அறையில் அடைத்து வைத்து அதிக அளவில் மாத்திரைகள் கொடுத்ததுடன் அவரது கணக்கிலிருந்த 15 கோடி ரூபாயை வேறு கணக்கிற்கு மாற்றி இருக்கிறார். அவருக்கு மேலும் 5 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். ரியா தந்த மன அழுத்தம் தான் சுஷாந்த் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தது. அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கை பாட்னா போலீஸார் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
இதுகுறித்து ரியாவிடம் விசாரணை நடத்த பாட்னா (சென்ட்ரல்) எஸ்.பி. வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று மும்பை வந்தடைந்தனர்.பாட்னாவிலிருந்து வந்த போலீஸ் அதிகாரி வினேய் திவாரி மற்றும் அவரது குழுவை அங்கிருந்த கொரோனா தடுப்பு பிரிவு மருத்துவ குழுவினர் அவர்களைச் சூழ்ந்துகொண்டு கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இதை பாட்னா டிஜிபி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்திப் பரிசோதிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால் அதன்படி விசாரிக்க மும்பை வந்த பாட்னா போஸீசாரை தனிமைப்படுத்தி உள்ளனர் எனக் கூறப்படுகிறது.சுஷாந்த் வழக்கை மும்பை மற்றும் பாட்னா என இரு மாநில போலீஸாரும் விசாரிக்கின்றனர். பாட்னா போலீசாருக்கு மும்பை போலீஸார் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். இது இரு மாநில பிரச்சனையாகி இருக்கிறது.