`அவமானப்பட்டது போதும் அக்கா.. இனியும் வேண்டாம்! -பிரேமலதாவிடம் ஏன் கொதித்தார் சுதீஷ்?!

தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில் கொரோனா காலத்திலும், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. ரகசியமாக ஆரம்பித்திருக்கும் இந்தப் பேச்சுவார்த்தையால் இந்தத் தேர்தலில் பல்வேறு கூட்டணி மாற்றங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் முதலாவதாக விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக முதல் கட்சியாக தங்கள் கூட்டணி குறித்த ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது என்கின்றனர் அக்கட்சி வட்டாரத்தினது. விஜயகாந்த்தின் உடல்நிலை காரணத்தால் இந்தமுறையும், கட்சியின் முக்கிய முடிவுகளை பிரேமலதாவும், சுதீஷும் எடுக்கவுள்ளனர்.

இதற்கிடையே, வரும் தேர்தலுக்கு திமுக கூட்டணி பக்கம் சாயலாம் என்று விரும்புகிறாராம் எல்.கே.சுதீஷ். இதை தன் அக்கா பிரேமலதாவிடமும் சுதீஷ் சொல்லி விட்டார் என்பது தான் தேமுதிகவின் இப்போதைய ஹாட் டாப்பிக். அதிமுக மீது இருக்கும் அப்செட்டே சுதீஷ் திமுக பக்கம் சாய்வதற்கான காரணம் என்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள். இதுதொடர்பாக, தேமுதிகவின் நிர்வாகிகள் சிலர் பேசுகையில், ``பாமகவுக்குத் தரும் முக்கியத்துவத்தில் கொஞ்சம் கூட தேமுதிகவுக்கு அதிமுக தலைமை தரவில்லை என்பதே சுதீஷின் வருத்தத்துக்கு முதல் காரணம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டாம் என முதலில் சொன்னவர் இதே சுதீஷ் தான். ஆனால் அப்போது அவரை சமாதானப்படுத்தி பிரேமலதா தான் அதிமுகவோடு கூட்டணி அமைத்தார். ஆனால் பாமகவைத் தலையில் வைத்து கொண்டாடிய அதிமுக, எங்களைச் சரியாகக் கண்டு கொள்ளவில்லை. போதாக்குறைக்கு ராஜ்ய சபா சீட்டிலும் தேமுதிகவைக் கை கழுவியது அதிமுக. இதுபோன்ற சம்பவங்கள் சுதீஷ் மனதில் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டி பிரேமலதாவிடம் தனது குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார் சுதீஷ்.மேலும், "தேமுதிக தவறான நிலைப்பாட்டால் தான் இரண்டு முறையும் ஆட்சிக்கு வந்தது. 2011, 2016ல் அதிமுக ஆட்சியைப் பிடித்ததற்குக் காரணமே தேமுதிக தான். 2016ல் தேமுதிக மக்கள்நலக் கூட்டணியில் இணைத்துப் போட்டியிட்டதால் அதிமுக மீண்டும் எளிதாக ஆட்சிக்கு வந்தது. 2011ல் நம் கூட்டணியில் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதை மறந்து அப்போதே கேப்டனை அவமானப்படுத்தியது அதிமுக. இதை எல்லாம் மறந்து மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு நட்பு பாராட்டினோம். இத்தனைக்கும் இந்த தேர்தலில் திமுக நம்மோடு கூட்டணி வைக்க தயாராகத்தான் இருந்தது. ஆனால் அதிமுகவோடு கூட்டணி வைத்ததற்கு நமக்குக் கிடைத்த பலன் அவமானம் மட்டுமே. உள்ளாட்சித் தேர்தல், ராஜ்ய சபா தேர்தலில் நமக்கு அவமானமே மிஞ்சியது. இதனால் அசிங்கப்பட்டது போதும் அக்கா. இனியும் வேண்டாம்" என்று கொட்டி தீர்த்துள்ளார் சுதீஷ். பிரேமலதாவும் இந்த விஷயத்தை ஆலோசிப்பதாகக் கூறியிருக்கிறார்.

சுதீஷ் திமுக கூட்டணியை விரும்புவதற்கு திமுக தலைவர்களுடன் தனக்கு இருக்கும் நெருங்கிய நட்பும் ஒரு காரணம். அவர்கள் மூலமாக ஸ்டாலினுக்குக் கூட்டணி தூது அனுப்பி வருகிறார்" என்கின்றனர்.

More News >>