பளிங்கு குடோனில் உடல் , மழுப்பலால் சிக்கிய நண்பன்! -உ.பியை அதிரவைத்த வக்கீல் மரணம்
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜாவைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மேந்திர சதாரி. 8 நாள்களுக்கு வீட்டை விட்டுச் சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில் சதாரி, தனது நண்பர் விக்கி என்பவர் அழைப்பின் பேரில் மார்பிள் குடோனுக்கு விருந்துக்குச் சென்றது தெரியவந்தது. ஆனால் அங்குச் சென்று விசாரணை செய்ததில் அவர் வரவில்லை என்று தெரிவித்தனர். செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது மார்பிள் குடோனுக்குச் செல்லும் பாதி வழியிலேயே நின்று போனது.
அதேநேரம் செல்போன் சிக்னல் கடைசியாகக் கிடைத்த இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் சதாரியின் பைக் கண்டெடுக்கப்பட்டது. இதனால் மிஸ்ஸிங் கேஸாக இருந்த சதாரி வழக்கு, கடத்தல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுத் தேடினர் போலீஸார். இதன்பின் மோப்ப நாய், ட்ரான் என குர்ஜா நகர் முழுவதையும் சல்லடைப் போட்டுத் தேடியது போலீஸ். அதேநேரம் கடைசியாக சதாரி வீட்டைச் செல்லும் போது நண்பனின் குடோனுக்கு செல்கிறேன் என்று சொன்னதால், அவரின் நண்பன் விக்கியை கண்காணிப்பு வளையத்திலேயே வைத்திருந்தது போலீஸ்.
இதற்கிடையே தான், சதாரியின் வீட்டில் ஒரு டைரி குறிப்பை போலீஸார் கண்டுபிடித்தனர். அதில், ரூ.70 லட்சம் விக்கி உள்ளிட்ட தனது நண்பர்களுக்கு சதாரி கடன் கொடுத்த தகவல் கிடைக்கவே, விக்கி மீதான சந்தேகத்தை போலீஸார் உறுதிப்படுத்தினர். உடனே உண்மை கண்டறியும் சோதனைக்கு விக்கியை அழைத்தனர். முதலில் போலீஸின் அழைப்புக்குச் சம்மதம் தெரிவித்தவர், அடுத்து வர மறுத்துள்ளார். இதில் கூடுதல் சந்தேகம் ஏற்படவே, விக்கியின் குடோனில் அதிரடியாகப் புகுந்து தேடுதல் நடத்தியது போலீஸ்.
அப்போது குடோனில் மார்பிள் கற்கள் அடுக்கப்பட்ட இடத்தில், துர்நாற்றம் அடித்தது. அதைத் தோண்டவே சதாரியின் உடல் மிக மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் சதாரி காணாமல் போன போது அது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது. ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது இந்த வழக்கு. இந்நிலையில்தான் நண்பனால் கொலை செய்யப்பட்ட விஷயம் வெளியில் தெரிய இப்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது.