`என் ரோஜாவுக்காக பூத்த ரோஜாக்கள் -காதல் மனைவிக்காக கவிதை மழை பொழியும் பாண்டியா!
இந்திய அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கபில் தேவ்வுக்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ஆகத் தகுதி படைத்தவர் எனப் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு காயத்தால் போட்டியில் இருந்து விலகிய பாண்டியா, துபாயில் திடீரென ஒரு படகில் வைத்து தன் தோழி நடாஷா ஸ்டான்கோவிக்விடம் காதலைச் சொன்னார். பின்னர் திருமண நிச்சயதார்த்தமும் செய்யப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, தாங்கள் தங்களின் குழந்தையை எதிர்நோக்கி இருப்பதாகப் பதிவிட்டார் பாண்டியா. அதிலிருந்தே குஷியின் உச்சத்தில் இருந்தார்.
இந்நிலையில், பாண்டியாவுக்கு கடந்த வாரம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கை மட்டும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை வலைத்தளங்களில் பதிவிட்டார். அப்போதே பாண்டியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இதன்பின் தினமும் தன் குழந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளிவருகிறார்.
இதற்கிடையே, தற்போது நடாஷாவுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``என் வாழ்நாளில் சிறந்த பரிசை கொடுத்த உனக்கு நன்றிகள்" என்றும், `என் ரோஜாவுக்காகப் பூத்த ரோஜாக்கள்' என்று தன் காதல் மனைவி நடாஷாவுக்காக கவிதைகளை அள்ளித் தெளித்துள்ளார் பாண்டியா.
தற்போது தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொழுதைப் போக்கி வரும் பாண்டியா, குழந்தை பிறந்த உற்சாகத்தில் விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டையைச் சுழற்ற இருக்கிறார்.