கொரோனாவில் இருந்து மீண்டது 2 லட்சம் பேர்.. பலியானது 4241 பேர்..

தமிழகத்தில் நேற்று புதிதாக 5609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. கோயில்கள், பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.ஆனாலும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.3) ஒரே நாளில் 5609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 42 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 53,222 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் இருந்து நேற்று 5800 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதையடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை 2 லட்சத்து 2283 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 109 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4241 ஆக உயர்ந்தது. சென்னையில் தினமும் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1021 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 2985 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டில் நேற்று 331 பேருக்கும், காஞ்சிபுரம் 322, மதுரை 106, திருவள்ளூர் 332 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 15,657 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,455 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 14,750 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல மாவட்டங்களில் நேற்று 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் குறைவாக உள்ளது. இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 63 ஆயிரம் பேரில் 2 லட்சத்து 2283 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 61 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More News >>