2வது நாளாக கனமழை.. வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை

மும்பையில் தொடர்ந்து 10 மணி நேரமாகப் பெய்த கனமழையால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று தொடர்ந்து 10 மணி நேரம் மழை கொட்டியது. முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டதால், சாலைகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதே போல், ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், பல பகுதிகளில் மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

மும்பை பெருநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் இன்று விடுமுறை விடப்பட வேண்டுமென்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அவசரத் தேவைகள் இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் கொங்கன் மண்டலத்தின் கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பைக்கு 2 நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

More News >>