அயோத்தி ராமர் கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா.. பிரதமர் மோடி பங்கேற்பு..
அயோத்தியில் ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, நாளை(ஆக.5ல்) நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ராமர் பிறந்த பூமியாகக் கருதப்படும் இடத்தில் கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை, நாளை(ஆக.5) காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதையொட்டி, கவுரி விநாயகர் பூஜையுடன் நேற்றே விழா தொடங்கியது. வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 சாமியார்கள், ராமஜென்மபூமி வளாகத்தில் இந்த சடங்குகளை நடத்தினர்.