நான்கு நிகழ்ச்சிகள், ஆளுநர் சந்திப்பு - எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது?!
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கின்ற நிலையில், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எடியூரப்பாவால் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது. இதற்கிடையே, முதல்வரின் உடல்நலன் குறித்த கவலையில் இருக்கும் கர்நாடகா சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்தே, மாநிலத்தின் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதே தவிர்த்து வந்தார் எடியூரப்பா. அதைப்போல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா சோதனையும் செய்து கொண்டுள்ளார். ஒரு முறை, கோவிட் சென்டரை ஆய்வு செய்தபோது அங்கிருந்த அதிகாரிகள் மூவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார். அப்படி இருந்தும் அவருக்கு நோய்த்தொற்று எப்படி வந்தது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் அதிகாரிகள்.
சில நாட்களுக்கு முன்பு வரை கர்நாடகாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மாநிலத்தின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த வாரம் ஊரடங்கை வாபஸ் பெற்றார் எடியூரப்பா. இதன்பின் 4 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி மூலமாகத்தான் எடியூரப்பாவுக்கு நோய்த்தொற்று வந்திருக்கும் எனச் சந்தேகிக்கின்றனர். இந்த நான்கு நிகழ்ச்சிகள் ஒன்று, ஆளுநரைச் சந்தித்ததும். இதுபோக மெட்ரோ ரயில் பணியின் தொடக்க விழா, அறிவியல் ஆராய்ச்சி கட்டடத்தின் பூமி பூஜை விழா ஆகியவற்றிலும் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டிருக்கிறார். இதனால் எடியூரப்பாவுக்கு நோய்த்தொற்று எப்படி வந்தது என்பதை டிரேஸ் செய்ய முடியாமல் இருக்கின்றனர். அதேபோல் எடியூரப்பா மூலம் யாருக்கெல்லாம் நோய்த்தொற்று பரவியிருக்கிறது என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதனால் கர்நாடக மாநில அரசியலில் சிறிய பதற்றமும் உருவாகியுள்ளது.