தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 108 பேர் பலி..
தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 108 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4349 ஆக அதிகரித்திருக்கிறது.சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தினமும் ஆயிரத்துக்குக் குறையாதவர்களுக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் நோய்ப் பரவல் கட்டுப்படவில்லை.தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.4) ஒரே நாளில் 5063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 28 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 68,285 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6501 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 8784 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 108 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4349 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று 1023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 4027 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 245 பேருக்கும், காஞ்சிபுரம் 220, மதுரை 40, திருவள்ளூர் 308 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 15,917 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,487 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 15,096 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல மாவட்டங்களில் நேற்று 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. மாநிலம் முழுவதும் இது வரை 20 லட்சத்து 8784 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 52,955 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.