அயோத்தியில் கோலாகலம்.. ராமர் கோயில் பூமி பூஜை விழா..

அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி இன்று(ஆக.5) அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ராமர் பிறந்த பூமியாகக் கருதப்படும் இடத்தில் கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், ராமர் கோயிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான சிறப்புப் பூஜைகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வருகிறார்.

அயோத்தி வந்து சேர்ந்ததும் அனுமன்கார்கி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். அங்கிருந்து 12 மணியளவில் ராமஜென்மபூமிக்கு சென்று அங்கு ராம்லல்லா (குழந்தை ராமர்) கோயிலில் தரிசனம் செய்கிறார். அங்கு மரக்கன்று ஒன்றையும் பிரதமர் நட்டு வைக்கிறார்.இதைத்தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் ராமர் கோயில் பூமி பூஜை விழாவுக்குச் செல்கிறார். பிரமாண்டமாகக் கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல்லை அவர் நாட்டுகிறார். விழாவின் நினைவாகச் சிறப்புத் தபால் தலைகளையும் அவர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். பின்னர், அவர் ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்குத் திரும்புவார்.

பிரதமராக 2வது முறை பொறுப்பேற்ற பிறகு அயோத்திக்கு மோடி வருவது இதுவே முதல் முறையாகும். தேர்தல் பிரசாரத்திற்கு அயோத்திக்குச் சென்றிருந்தாலும் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக அங்குச் சாமி தரிசனம் செய்வதைத் தவிர்த்து வந்தார். ராமர் கோயில் பூமி பூஜை விழாவையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் வண்ண மலர்களாலும், ஒளிவிளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அயோத்திக்கு நேற்றே வந்துள்ளனர்.

More News >>