நடிகர் தற்கொலை வழக்கில் குரல் கொடுக்கும் சீனியர் நடிகர்.. கண்டும் காணாமலிருப்பது கோழைத்தனம்..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது விசாரணை சிபிஐயிடம் சென்றிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் வழக்கைத் தாமதப்படுத்துகிறது, சுஷாந்த் தற்கொலை சாட்சியங்களை அழிக்க முயல்கிறது என சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதற்கிடையில் சுஷாந்த் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் தந்தை கே கே சிங் பாட்னா போலீசில் புகார் அளிக்க அதை விசாரிக்க மும்பை வந்த அதிகாரி வினய் திவாரி வலுக்கட்டாயமாக கொரோனா முகாமில் அடைக்கப்பட்டார்.தன் மீதான வழக்கை மும்பை போலீசுக்கு மாற்ற வேண்டும் என்று ரியா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சுஷாந்த் வழக்கில் எல்லோருக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று சீனியர் நடிகர் அனுபம் கெர் குரல் கொடுத்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் பல மாறுபாடுகள் உள்ளன. நான் பல நாட்களாக இது பற்றி எதுவும் பேசாமல் இருந்தேன், இன்னும் பலர் கருத்துச் சொல்வதைத் தவிர்க்கிறார்கள், ஆனால் இதில் அமைதி காப்பது யாருக்கும் பிரயோஜனமில்லை. தற்போதுள்ள சூழலில் சக நடிகனாக, மனிதனாக பேசுகிறேன். யாருக்கும் ஆதரவாகப் பேச வேண்டாம் ஆனால் எது சரி என்பதை வெளிப்படுத்த வேண்டும். சுஷாந்த் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் நீதிக்குப் போராடும் நலம் விரும்பிகளுக்கு நாம் அவர்களுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.எந்தவொரு ஒரு தவறையும் கண்டும் காணாமல் இருப்பது கோழைத்தனம்.
இவ்வாறு அனுபம் கெர் கூறியுள்ளார்.