ஆந்திர `சாத்தான்குளம் சிராலாவில் பறிபோன இளைஞர் உயிர்.. சிக்கிய போலீஸ் எஸ்.ஐ!

இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள சிறிய ஊரான சாத்தான்குளம் சமீபத்தில் இந்தியா முழுவதும் பேசு பொருளானது. அதற்கு காரணம், தமிழக போலீஸின் கொடூர முகம்தான். செல்போன் கடையை நேரம் மீறித் திறந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திலேயே வைத்து சித்ரவதை செய்து கொடூரமாக சிதைக்க இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். இவர்கள் இருவரையும் காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்தனர். இதனால் இருவரின் பின்புறம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வடுகூட ஆறாத நிலையில், இதேபோன்று ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிராலா நகரைச் சேர்ந்த தலித் இளைஞர் யெரிச்சார்லா கிரண். இவர் தனது நண்பருடன் கடந்த மாதம் 18ம் தேதி சிராலா நகர் பகுதியில் பைக்கில் வந்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் மாஸ்க், ஹெல்மெட் இல்லாமல் இருவரும் வந்ததைப் பார்த்த, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பியுள்ளனர். சில நொடிகளில் போலீஸுக்கும், இளைஞர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, இருவரையும் கைது செய்த போலீஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில் தலையில் அடிபட்ட நிலையில் கிரண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், கிரண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறியதால், உடனடியாக குண்டூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கிரண் உயிரிழக்க நேரிட்டது. கிரண் உயிரிழப்பு விவகாரம் சிராலா நகர் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. `கஸ்டடியில் கிரணை போலீஸ் கடுமையாக சித்திரவதைகளைச் செய்துள்ளது. போலீஸ் தலையில் தாக்கியதால் தான் அவன் உயிரிழக்க நேரிட்டது' என்று சிராலா நகர காவல்நிலைய எஸ்.ஐ விஜய் குமார்மீது கிரணின் தந்தை குற்றம் சாட்டினார். அதேநேரம், சிராலா நகர போலீஸாரோ, ``நாங்கள் கைது செய்யும்போது இரண்டு இளைஞர்களும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் மாஸ்க் இல்லாமல் சுற்றித் திரியவே இருவரையும் எச்சரித்தோம். எச்சரித்துக்கொண்டிருக்கும்போதே தலைமை காவலரை கிரண் அடிக்கப் போனார். அதேபோல் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில் வேனில் இருந்து கிரண் குதித்துவிட்டார். இதில் அவருக்குத் தலையில் காயம்பட்டது" எனக் கூறினர்.

கிரணின் மரணம், அரசியல் ரீதியாக மாறியது. சந்திரபாபு நாயுடு மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நார லோகேஷ், கடுமையாக ஜெகனின் ஆட்சியைச் விமர்சனம் செய்தார். சிராலா பகுதியிலும் தொடர் பதற்றம் நிலவியதுடன், கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. தொடர் அரசியல் அழுத்தம் ஏற்பட, முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி ஒரு விசாரணை கமிட்டி அமைத்து, மேலும் இறந்த கிரணின் குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் அளிக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, விசாரணை கமிட்டியின் விசாரணையில் எஸ்.ஐ விஜய் குமார் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் 15 நாள்களுக்குப் பிறகு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைது இந்த விவகாரத்தில் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

More News >>