சோதனை மேல் சோதனை.. ஐபிஎல் வீரர்கள் அமீரகத்தில் சந்திக்க இருக்கும் சவால்!
பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஊரே கொரோனா தொற்றால் அவதியுற்று இருக்கும் வேளையில் பிசிசிஐ துணிச்சலாக ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவித்தது. மேலும், செப்டம்பர் 19ம் தேதி அமீரகத்தில் தொடங்கும் என அறிவித்து, அதற்கான அனுமதியையும் வாங்கிவிட்டது. வீரர்களும் தங்கள் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் அவர்கள் விமானம் ஏறிவிடுவார்கள்.
உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், கிரிக்கெட் வீரர்களுக்கும், ஐபிஎல் ஊழியர்களுக்கும் தீவிரமான பரிசோதனைகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்திய வீரர்களை வைத்து இந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில் ஐபிஎல்லில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய வீரர்கள், ஊழியர்களுக்கு இரண்டு கட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும், அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானால் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் அமீரகத்துக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு 2 கட்ட சோதனைகள் நடத்தப்படவுள்ளது. அதில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் அமீரகத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பின்பும், 3 சோதனைகள் நடத்தப்படும். அதில் பாதிப்பு இல்லை வரும் பட்சத்திலேயே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் தொடர் முடியும் வரை 5 நாட்களுக்கு ஒருமுறை வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது. இது அனைத்தும் பிசிசிஐ நடத்தும் சோதனைகள். இதனைத் தாண்டி, ஐக்கிய அரபு அமீரக அரசு சில சோதனைகளைச் செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.