தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் பலி..
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து 110 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் இன்னும் பரவி வருகிறது. இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.6) ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 42 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 79,144 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6272 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 21,087 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 110 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4571 ஆக உயர்ந்தது. சென்னையில் தினமும் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1091 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 6096 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 408 பேருக்கும், காஞ்சிபுரம் 336, மதுரை 101, திருவள்ளூர் 320 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 16,897 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,689 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 15,850 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல மாவட்டங்களில் நேற்று 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று வரை 29 லட்சத்து 10,468 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 65,062 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 79 ஆயிரம் பேரில் 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 55000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.