இலங்கையில் மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறார்.. தேர்தலில் அமோக வெற்றி..
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகிறார். அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இலங்கையில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இறுதிக்கட்ட போர் நடந்த போது, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தார். அவரது சகோதரரான கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு ராணுவ செயலராக இருந்தார். அந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்களைக் குறி வைப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தனர். இது தொடர்பாகச் சர்வதேச விசாரணைக்கு நீண்ட காலமாகக் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபராகி விட்டதால், இடைக்கால பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அதைக் கலைத்துத் தேர்தல் நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.இதன்படி, சமீபத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று(ஆக.6) எண்ணப்பட்டன. 22 மாவட்டங்களில் 77 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், கோத்தபய ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியே பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த கட்சி மொத்தம் 68 லட்சத்து 53,693 வாக்குகளைப் பெற்று, 128 இடங்களில் வென்றது. அத்துடன் 17 தேசிய உறுப்பினர்களையும் சேர்த்து தற்போது நாடாளுமன்றத்தில் 145 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 225 இடங்களில் மூன்றில் இரு பங்கை(150) விடச் சற்று குறைவான இடங்களைப் பெற்றிருக்கிறது.2வது இடத்தில் சஜித் பிரேமதாசாவின் எஸ்ஜேபி கட்சி, 27 லட்சத்து 71,784 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்படி, இக்கட்சிக்கு 47 இடங்களும், 7 தேசிய உறுப்பினர்களுமாக மொத்தம் 54 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அங்கமான இலங்கை தமிழரசு கட்சி 10+1 இடங்களைப் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கட்சி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அக்கட்சிக்கு 2.15 சதவீத வாக்குகளே கிடைத்ததால், நாடாளுமன்றத்தில் ஒரேயொரு எம்.பி.தான் இடம்பெறுகிறார்.தற்போது மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா பொறுப்பேற்கவுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் மகிந்த ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்தார். இருநாடுகளும் தொடர்ந்து நட்புறவுடன் செயல்பட விருப்பம் தெரிவித்தார்.