அதிகாலை பயங்கரம்: நிலச்சரிவால் காணாமல் போன 80 பேர்!
கடந்த சில வருடங்களாகக் கனமழை போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கித் தவித்து வருகிறது அண்டை மாநிலமான கேரளம். 2 வருடங்களுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டபோது பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்தனர். கடந்த வருடம், பெருமழையால் மலப்புரம், இடுக்கி போன்ற மலை மாவட்டங்கள் கடும் நிலச்சரிவைச் சந்தித்தன. இதில் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு கிராமமே நிலத்தில் சிக்கிக்கொண்ட துயரம் நடந்தது. இந்த துயரங்கள் அனைத்தும் தென்மேற்கு பருவமழையின் போது நடந்தவை.
இந்த ஆண்டும் சீசன் ஆரம்பித்த பிறகு கேரளத்தில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. ஒருபுறம் கொரோனா, மறுபுறம் கனமழை எனச் சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கேரள அரசு முயன்று வருகிறது. இதற்கிடையே, இன்று அதிகாலை அந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு முதலே பெய்து வரும் கனமழையால் மூணாறின் ராஜமலை அருகே உள்ள பெட்டி முடி பகுதி பெருத்த சேதத்தைச் சந்தித்துள்ளது. பெட்டிமுடி பகுதியில் உள்ள தேயிலை எஸ்ட்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு லைன் குடியிருப்புகள் இன்று அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இதில் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த சுமார் 80 பேர் சிக்கிக் காணாமல் போயுள்ளனர். அவர்களில் ஐந்துபேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்கள் நிலை என்னவென்பது தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம் மூணாறு. தமிழக எல்லையான இங்குத் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தேயிலை எஸ்டேட் வேலைக்குச் செல்பவர்கள். நேற்று சரிந்த வீடுகளிலும், தமிழர்கள் அதிகம் வசித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கூடுதல் அச்சம் ஏற்பட்டுள்ளது.