புதியக் கல்விக் கொள்கையில் பாகுபாடு எதுவும் இல்லை.. பிரதமர் மோடி பேச்சு..
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு பாகுபாடும் இருப்பதாக யாருமே சொல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சவாலான பணியாகும். இந்த கொள்கை குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கல்விக் கொள்கை மீது ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதுதான் கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும்.எந்த நாட்டிலும் தேசிய நலனைச் சார்ந்தே கல்வித் திட்டம் இருக்கும். கல்வித்திட்டம் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பலப்படுத்தவும் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஆரம்ப வகுப்புகளில் தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் அடித்தளம் சிறப்பாக இருக்கும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும். முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. அதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் கல்வியின் முக்கிய நோக்கம் என்று அப்துல் கலாம் கூறியிருக்கிறார். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஆலோசனைகள் பெறப்பட்டு, மூன்று நான்கு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுதான் இந்த கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கல்விக் கொள்கையை எப்படி நாம் செயல்படுத்தப் போகிறோம் என்று எல்லோரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எல்லோருடைய பங்களிப்பும் அவசியமாகும். அதே சமயம், இந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கான அரசியல் உறுதியை நான் தருகிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.