ஒரே இரவில் லட்சாதிபதி.. மத்தியப்பிரதேச தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா, உலகிலேயே வைரச் சுரங்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்று. சமீபத்தில் இந்த பன்னாவில் தொழிலாளி ஒருவருக்கு 10.69 காரட் எடையிலான வைரம் அவரது நிலத்தில் இருந்து கிடைத்தது. இப்போதும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே பன்னாவில் சுபல் என்ற தொழிலாளி ஒருவர் தன்னுடைய நிலத்தை தோண்டியுள்ளார். அதில், மூன்று வைரங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவர் ஒரே இரவில் லட்சாதிபதியாக மாறியுள்ளார். பன்னா மாவட்ட அதிகாரி ஆர்கே பாண்டே இது தொடர்பாக கூறுகையில், ``சுபல் தனக்குச் சொந்தமான நிலத்தில் பள்ளம் தோண்டியுள்ளார்.

அப்போது அவருக்கு மூன்று வைரங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் எடை 7.5 காரட். தற்போதைய நிலவரப்படி, இந்த வைரங்களின் மதிப்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாகும். அவர் கண்டெடுத்த வைரம் தற்போது, மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வைரங்கள் ஏலம் விடப்படும். வைரங்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படும். ஏலம் விட்ட தொகையில் இந்த வரி பிடிக்கப்படும். மீதமுள்ள 88 சதவீத பணம் சுபலுக்கு வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நேற்று வரை தொழிலாளியாக இருந்த சுபல் ஒரே இரவில் லட்சாதிபதி ஆகியுள்ளார்.

More News >>