மருத்துவ பணியாளர்களுக்கு நிதியுதவி தர மறுப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி..
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:“இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி - தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்” என்று அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.
“கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என்று முதலில் அறிவித்த முதலமைச்சர், பிறகு இப்படி உயிரிழப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, “மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை முன்களப் பணியாளர்களுக்கும் 10 லட்சத்திற்குப் பதில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும்” என்று 22.4.2020 அன்று அறிவித்தார்.கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முதல்நாளில் இருந்து இன்றுவரை குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டு - நிர்வாகத் தெளிவோ திட்பமோ இல்லாமல், குழப்பமான நிலையில், அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்தாலும், துவக்கத்திலிருந்து தங்களின் சுக துக்கங்கள் அனைத்தையும் மறந்து – தன்னலமற்ற பொதுச் சேவையாற்றி - கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் மக்களின் உயிரைத் தினமும் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள் முன்களப் பணியாளர்கள்தான்.
இதனால், தமிழகத்தில் மருத்துவர், காவல்துறையினர், செவிலியர், தூய்மைப் பணியாளர் என்று ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் மீண்டுள்ளார்கள்; சிலர் மாண்டுள்ளார்கள்.ஆனால் இதுவரை அரசு தரப்பிலோ அல்லது அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாகவோ வெளியிடப்படும் அறிக்கையிலோ (கொரோனா புல்லட்டின்) முன்களப் பணியாளர்கள் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டனர் - அவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் இடம்பெறுவதில்லை. அவர்களின் தியாகத்தைத் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்து வருகிறது அ.தி.மு.க. அரசு.
கொரோனா நோய்ச் சிகிச்சைப் பணியில் தொற்றுக்குள்ளாகி - குணமடைந்து - இதுவரை வீடு திரும்பியவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக முதலமைச்சர் உறுதியளித்த 2 லட்சம் ரூபாய் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது? என்று எந்த தகவல்களையும் வெளியிடாமல் - அந்தத் தகவல்களை எல்லாம் இரும்புத் திரை போட்டு பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு.முன்களப் பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் முதலமைச்சர். அந்த வாக்குறுதியைத் தவறாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருக்கிறது என்பதை முதலமைச்சர் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும்.
மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!அனாவசியமான - அவசர டெண்டர்களுக்கும் - ஊழல் காரியங்களுக்கும் நிதி ஒதுக்குவதைத் தள்ளிவைத்து விட்டு, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதியுதவியை 25 லட்சமாகக் குறைத்து – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த முன்களப் பணியாளர்களின் போற்றி வணங்க வேண்டிய பணியை அரசே மனிதாபிமானமின்றி சிறுமைப் படுத்திவிடக் கூடாது என்றும் - நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களை நட்டாற்றில் தவிக்க விட்டு விடக்கூடாது என்றும் முதல்வரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.