சென்னையில் குறைகிறது கொரோனா பாதிப்பு..
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று 984 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 6, 7 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு வந்தது. தற்போது அதிகமான பரிசோதனைகள் எடுக்கப்பட்டும், அது 6 ஆயிரத்துக்குக் கீழ் சென்றிருக்கிறது. அதே போல், சென்னையில் தினமும் 2, 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அது கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து. ஆயிரத்தை ஒட்டி வந்தது. தற்போது முதல் முறையாக நேற்று ஆயிரத்துக்கும் குறைந்தவர்களுக்கு நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.24) ஒரே நாளில் 5887 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 24 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 85,024 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6488 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 27,575 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 53,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 119 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4690 ஆக உயர்ந்தது.
சென்னையில் நேற்று 984 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 7109 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 319 பேருக்கும், காஞ்சிபுரம் 166, மதுரை 109, திருவள்ளூர் 388 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 17,227 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 16,220 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,707 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, கோவை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.